லாரியில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தல் : தமிழகத்தை சேர்ந்த 17 பேர் கைது!!
28 January 2021, 8:21 pmஆந்திரா : லாரி ஒன்றில் ரகசிய அறை ஏற்பாடு செய்து நூதன முறையில் செம்மரம் கடத்த முயன்ற வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேரை செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் உர மூட்டைகளை ஏற்றி செல்வது போல் லாரி ஒன்று சந்திரகிரி அருகே சேஷாச்சலம் வனப்பகுதிக்கு செல்வதை கவனித்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லாரியை மடக்கி தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உர மூட்டைகளை ஏற்றி செல்வது போல் செட்டப் செய்யப்பட்டு இருந்த லாரியில் ரகசிய அறை ஒன்று இருப்பதும், லாரியின் அடிப்பகுதியில் இருந்து ரகசிய அறைக்குள் செல்ல வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இந்தநிலையில் லாரியின் ரகசிய அறையில் பதுங்கி செம்மரங்களை வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்த சிலர் போலீஸ் நடவடிக்கையை பார்த்து தப்பி ஓடிவிட்ட நிலையில் 17 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரியில் எடுத்து செல்லப்பட்ட உணவு பொருட்கள், கோடாலி, ரம்பம் போன்ற மரம் வெட்ட பயன்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை லாரியுடன் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சத்யராஜ், பெருமாள் ஆகியோர் செம்மரம் வெட்ட அவர்களை அனுப்பி வைத்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை சென்று சத்யராஜ்,பெருமாள் ஆகியோரை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
0
0