ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா..! அடுத்த ஆபரேஷன் மணிப்பூரில்..?
11 August 2020, 7:33 pmமணிப்பூரில் உள்ள ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளனர்.
நேற்று இரவு சபாநாயகர் யும்னம் கெம்சந்த் சிங்கிற்கு ராஜினாமா கடிதங்களை வழங்கிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியை விட்டு வெளியேறுவது குறித்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு முறையாக தகவல் கொடுத்தனர்.
“மணிப்பூரின் ஆறு காங் எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை காங்கிரஸ் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்” என்று மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர் ஹரேஷ்வர் கோஷ்வாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நேற்று கட்சியின் உத்தரவை மீறி சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தைத் தவிர்த்த எட்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் இந்த ஆறு பேரும் உள்ளனர். நேற்று இந்த எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.’க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை எளிதாக வென்றது.
தற்போது ராஜினாமா செய்த இந்த ஆறு பேரில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவரான ஒக்ரம் ஹென்றி சிங், ஒக்ரம் இபோபி சிங் ஆகியோரும் அடங்குவர்.
ராஜினாமா செய்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஓனம் லுகோய், எம்.டி. அப்துல் நசீர், பாவனம் ப்ரோஜென், ந்கம்தாங் ஹாக்கிப் மற்றும் ஜின்சுவான்ஹாவ் என மணிப்பூர் சட்டமன்ற செயலாளர் எம்.ராமணி தேவி தெரிவித்தார்
அவர்களில் ஐந்து பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும், அவர்களது சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது எம்.எல்.ஏ பி ப்ரோஜனின் தகுதிநீக்க வழக்கு ஏற்கனவே சபாநாயகர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இது ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வரும் என்று அவர் கூறினார்.
ராஜினாமா செய்வதற்கான காரணங்கள் குறித்து, ஹென்றி சிங் அவர்கள் அனைவரும் இபோபி சிங்கின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததை மேற்கோள் காட்டியுள்ளனர். ஏனெனில் 2017’ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மாநிலத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதும் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டது.
நேற்று கூட்டத்தைத் தவிர்த்த எட்டு பேரில், மற்ற இருவர் பஸூர் ரஹ்மான் மற்றும் யம்தோங் ஹாக்கிப் என்றும் இவர்கள் இருவரும் வீட்டின் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் தெரிவித்ததாக சபாநாயகர் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே பஸூர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் வெற்றி ஒரு முன்கூட்டிய முடிவு என்றாலும், முக்கியமான அமர்வில் இருந்து எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இல்லாதது முதலமைச்சரின் புத்திசாலித்தனமான அரசியல் நகர்வைக் காட்டியது என மணிப்பூர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.