மீண்டும் ஆர்டிகிள் 370 மற்றும் சிறப்பு அந்தஸ்து..? ஜம்மு காஷ்மீரில் ஒன்று கூடிய 6 கட்சித் தலைவர்கள்..!
22 August 2020, 5:51 pmஜம்மு காஷ்மீர் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, தேசிய மாநாடு, காங்கிரஸ், பிடிபி, மக்கள் மாநாடு, சிபிஎம் மற்றும் அவாமி தேசிய மாநாடு உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் 2019 ஆகஸ்ட் 4’ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கு கட்டுப்பட்டிருப்பதாகவும், ஆர்டிகிள் 35ஏ மற்றும் 370’வது பிரிவுகளை மீட்டெடுக்க பாடுபடுவதாக வலியுறுத்தியுள்ளன.
“ஆகஸ்ட் 4, 2019 குப்கர் பிரகடனத்தின் உள்ளடக்கங்களால் நாங்கள் முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அனைவரும் மீண்டும் வலியுறுத்துகிறோம், அதை உறுதியான முறையில் கடைப்பிடிப்போம். ஆர்டிகிள் 370 மற்றும் 35 ஏ, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கு நாங்கள் பாடுபடுகிறோம். மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று தேசிய மாநாட்டுக் கட்சியால் வெளியிடப்பட்ட அரசியல் தலைவர்களின் கூட்டு அறிக்கை கூறியது.
கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் தேசிய மாநாட்டின் தலைவர் பாரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர், சிபிஎம் மாநில செயலாளர் முகமது யூசுப் தரிகாமி, மக்கள் மாநாட்டின் தலைவர் சஜ்ஜாத் கனி லோன் மற்றும் அவாமி தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் முசாபர் ஷா ஆகியோர் அடங்குவர்.
கூட்டு அறிக்கையில், ஆகஸ்ட் 5, 2019’இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு நிலை அகற்றப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநில பிளவு ஏற்பட்டபோது, ஜம்மு காஷ்மீர் மற்றும் புது தில்லி இடையேயான உறவை அடையாளம் காணமுடியாமல் மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
“வெறுக்கத்தக்க குறுகிய பார்வை மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமாக, ஆர்டிகிள் 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டன. மேலும் மாநிலம் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களின் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு செயல்படுத்த முடியாததாக மாற்றபட்டுள்ளது.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5 முடிவை “முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணானது” என்றும், ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை அடையாளத்திற்கு ஒரு சவால் என்றும் கூறிய கூட்டு அறிக்கை, இந்த நடவடிக்கைகள் நாம் யார் என்பதை மறுவரையறை செய்ய முயற்சிக்கின்றன என மேலும் கூறியுள்ளது.
“எங்கள் விருப்பத்திற்கு எதிராக, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்கும், பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும் நாங்கள் அயராது போராடுவோம். எங்கள் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் 2019 ஆகஸ்ட் 4’ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் இருந்த நிலையை மீட்டெடுக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.” என்று கூட்டு அறிக்கை மேலும் கூறியது.