இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கான் நிலத்தை பயன்படுத்தக் கூடாது..! ஜெய்சங்கர் வலியுறுத்தல்..!

12 September 2020, 3:03 pm
EAM_Jaishankar_UpdateNews360
Quick Share

ஆப்கானிஸ்தானின் மண்ணை ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு செயலுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தோஹாவில் ஆப்கானிய சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம்உரையாற்றிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக உறவு தொடர்ந்து வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“எங்கள் மக்களின் நட்பு ஆப்கானிஸ்தானுடனான நமது வரலாற்றுக்கு ஒரு சான்றாகும். ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவின் 400’க்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களால் ஒன்றிணைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான வரலாற்று சமாதான பேச்சுவார்த்தைகளில் பேசிய ஜெய்சங்கர், சமாதான முன்னெடுப்புகள் ஆப்கான் தலைமையிலான, ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் ஆப்கானியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றும், நாடு முழுவதும் வன்முறைகள் திறம்பட தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

இதற்கிடையில், தலிபானின் அரசியல் தலைவர் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர், அனைவரும் தங்கள் பேச்சுவார்த்தைகளிலும் ஒப்பந்தங்களிலும் இஸ்லாத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தனிப்பட்ட நலன்களுக்காக இஸ்லாத்தை தியாகம் செய்யக்கூடாது என்றும் விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான் மற்றும் ஆப்கான் அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஒட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவும் தோஹாவில் உள்ளார். ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் தலிபான்களின் பிரதிநிதிகளுடன் தனித்தனி சந்திப்புகளை அவர் நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.

பிப்ரவரி 29 அன்று அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட வரலாற்று ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0