மத்திய அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்..! காரணம் இது தானா..?
20 January 2021, 11:44 amநேற்று வெளியிடப்பட்ட ராஷ்டிரபதி பவன் அறிக்கையின்படி, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சரான ஸ்ரீபாத் யெசோ நாயக் கோவாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
68 வயதான நாயக் கர்நாடகாவிலிருந்து கோவா திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து ஜனவரி 12’ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சரின் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், நாயக் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
“இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, நாயக் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், அவர் நிர்வகித்து வந்த ஆயுஷ் அமைச்சகம் தற்காலிகமாக கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி உத்தரவிட்டுள்ளார்.” என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் தொடர்பான பணிகளை நாயக் சிகிச்சை முடிந்து மீண்டும் தொடங்கும் வரை, கிரண் ரிஜிஜு கவனிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
0
0