‘டாக்டர் ஆக வேண்டிய மகனின் உடல் மருத்துவ மாணவர்களுக்கு உதவட்டும்’: நவீனின் உடலை தானமாக வழங்கிய பெற்றோர் உருக்கம்..!!

Author: Rajesh
21 March 2022, 3:27 pm
Quick Share

கர்நாடகா: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீனின் உடலை அவரது பெற்றோர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 1ம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலம் சலகேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். நவீன் கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.

மார்ச் 1ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் உடலை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று காலை 3.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. நவீன் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நவீனின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிப்பதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை சேகரப்பா கவுதார் கூறுகையில், ‘மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று மகன் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது அவரது உடல் மற்ற மாணவர்களின் கல்விக்கு உதவட்டும்.

மகனின் உடலையாவது பார்க்கிறோம் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. மேலும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நவீன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நவீனின் உயிரிழப்புக்கு இழப்பீடாக கர்நாடக அரசு ரூ. 25 லட்சத்திற்கான காசோலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது.

Views: - 758

0

0