50%’க்கும் மேல் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியுமா..? அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

8 March 2021, 2:14 pm
supreme_court_updatenews360
Quick Share

மராட்டிய இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அனைத்து மாநிலங்களும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 50 சதவீதத்திற்கு அப்பால் இடஒதுக்கீடு அனுமதிக்க முடியுமா என்பது குறித்து மாநிலங்கள் தங்கள் பதிலை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் தினசரி விசாரணையை மார்ச் 15 முதல் மீண்டும் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 1992’ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், பின்தங்கிய சாதிகள் மற்றும் எஸ்சி/எஸ்டி ஆகியவற்றுக்கு வழங்கும் 50% இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் இந்த வழக்கில் எந்தவொரு தீர்ப்பும் மாநிலத்தின் அதிகாரங்களை பாதிக்கக்கூடும் என்பதால், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும் பிரச்சினையை உள்ளடக்கியது என்று வாதிட்டதை அடுத்து, உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களையும் விசாரிக்கும் முடிவை எடுத்தது. .

“102’வது சட்ட திருத்தத்தின்அமலாக்கலில் எழுந்திருக்கும் பிரச்சினையின் முக்கிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளுக்கான மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீட்டின் செல்லுபடியை உறுதிப்படுத்திய பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் மராட்டிய சமூகத்திற்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிர அரசின் எஸ்இசிடி சட்டம் முயல்கிறது. உயர்நீதிமன்றம் சட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்தது. ஆனால் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீட்டை 12 சதவீதமாகவும், வேலைகளில் 13 சதவீதமாகவும் குறைத்தது.

இதற்கிடையே 1992’ஆம் ஆண்டு தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவதாக இது உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் விசாரிக்கப்படுகின்றன.

Views: - 11

0

0