சஸ்பெண்டான 12 எம்.எல்.ஏ-க்களும் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

Author: Udhayakumar Raman
22 September 2021, 10:24 pm
election commison - updatenews360
Quick Share

மகாராஷ்டிரா: சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாக்களிக்க உரிமை உள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தை பொருத்தவரை இரண்டு காலியான இடங்களுக்கு இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடைபெறாது. ஆனால் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

அதனால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை அம்மாநில சட்டப்பேரவை செயலக அலுவலகம் செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த போது, சபாநாயகரை அவதூறாக பேசி தாக்க முயன்றதால் 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்தத் தேர்தலில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் உரிமை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

நீண்ட பரிசீலனை மற்றும் சட்ட விதிகள் ஆராயப்பட்ட பின்னர், அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சஸ்பெண்ட் ஆன 12 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேலும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் செய்து வருகிறது.

Views: - 185

0

0