புதிய பாராளுமன்றக் கட்டிட கட்டுமானம்..! டெண்டரைக் கைப்பற்றியது டாடா நிறுவனம்..!

16 September 2020, 6:18 pm
New_Parliament_Building_UpdateNews360
Quick Share

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ரூ 861.9 கோடி செலவில் கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் வென்றுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ரூ 861.90 கோடியும், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் ரூ 865 கோடி ஏலத்தையும் சமர்ப்பித்துள்ளது.

புதிய பாராளுமன்றக் கட்டிடம் :

வரும் 2026’ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்னிக்கை மறுவரையரை செய்யப்படும் போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போதே பாராளுமன்றம் இட நெருக்கடியால் அவதிப்படும் நிலையில், வரும் காலத்தையும் மனதில் கொண்டு புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெல்லியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியது.

டெண்டரில் வெற்றி பெற்ற டாடா நிறுவனம் :
முதற்கட்ட டெண்டரில் மும்பையை தளமாகக் கொண்ட மூன்று கட்டுமான நிறுவனங்களான லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று நிறுவனங்களும் நிதி ஏலத்தில் கலந்து கொள்ள அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் மற்ற நிறுவனங்களை விட டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்ச தொகையாக 861.9 கோடி ரூபாயை சமர்ப்பித்தது. இதன் மூலம் டாடா நிறுவனம் டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே கட்டுமான டெண்டருக்கு நாட்டின் சின்னத்துடன் கூடிய வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு பெரிய இருக்கை வசதி கொண்ட அரங்குகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள், அத்துடன் ஒரு முற்றம், சாப்பாட்டு வசதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான லவுஞ்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது மற்றும் 2022 இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரையிலும் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 0

0

0