தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை: முதலமைச்சர் நாராயணசாமி கருத்து..!

6 December 2019, 4:11 pm
Naryanasamy- updatenews360 (8)
Quick Share

புதுச்சேரி: தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை என்றும், இதன்மூலம் குற்றவாளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும், இன்று காலை தெலுங்கானா போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு, அழைத்துச் சென்றபோது அவர்கள், தப்பிச்செல்ல முயன்றதால், நான்கு பேரையும் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொள்ளப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை இறைவன் கொடுத்த தண்டனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், குற்றவாளிகள் இச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுகொள்ள வேண்டும். புதுச்சேரியிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரச்சினைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல், அரசை விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. தனிமனித சுதந்திரம் தற்போது, கேள்விக்குறியாகிள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வு சாதாரண மக்களை அதிகமாக பாதித்துள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராம் பூண்டு, வெங்காயம் குறைவாக சாப்பிடுகிறேன் என மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். விலைவாசி குறைக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார வீழ்ச்சியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கடுமையான வீழ்ச்சியில் பொருளாதாரம் உள்ளது என்றார்.