பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திருமணம்…
11 August 2020, 10:41 pmதெலங்கானா: கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற திருமணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் என்பவருக்கும், கொல்லகூடத்தை சேர்ந்த இஸ்லாமிய பென்ணுக்கும் இடையே மலர்ந்த காதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைத்திருந்தது. ஆனால் அவர்களுடைய காதலுக்கு காதலி குடும்பத்தார் தடை போட்டனர். காதலன் குடும்பத்தார் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். ஒரு தரப்பு ஒப்பு கொள்ளாததால் திருமணம் என்பது கானல் நீராக இருந்தது. இந்த நிலையில் கொல்லகூடத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஷேக் சோனி பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.
எனவே இந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது. எனவே நாங்கள் இந்து முறைப்படி மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என்று இரண்டு பேரும் கூறிவிட்டனர். அதன்படி நேற்று அவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி மேளதாளங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க, அக்னி வளர்த்து, மாலை மாற்றி, தாலிகட்டி சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.