தொழிலதிபர் மகனுக்கு திருமணம்.! வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளை.!!
3 August 2020, 4:49 pmதெலுங்கானா : ஹைதராபாத்தில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் உட்பட இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள சைனிக்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலதிபர் நரசிம்மா ரெட்டி. அவருடைய மகனுக்கு நேற்று முன்தினம் சீரடியில் திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நரசிம்மா ரெட்டி நேபாளத்தை சேர்ந்த வாட்ச்மேன் மற்றும் 2 பேர் ஆகியோரை வீட்டு காவலுக்கு விட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் 3 பேரையும் காணவில்லை.
மேலும் வீட்டில் உள்ள லாக்கரை உடைத்து அதிலிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் உட்பட மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
நரசிம்ம ரெட்டி அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடைக்கப்பட்ட லாக்கரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து மாயமான வீட்டின் காவலாளி மற்றும் 2 பேரை தேடி வருகின்றனர்.