“தீவிரவாதம் புற்றுநோயை விட கொடியது” – அமைச்சர் ஜெயசங்கர்..!
28 August 2020, 6:08 pmகொரோனா பெருந்தொற்றை போல் தீவிரவாதம் அனைவரையும் பாதிப்பதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் கூறியுள்ளார்.
டெல்லி எரிசக்தி மற்றும் ஆதாரங்கள் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, தீவிரவாதம் என்பது கொரோனாவை விட கொடியது எனக்கூறினார். கொரோனா போன்ற குறிப்பிட்ட சூழ்நிலை ஏற்பட்டு மக்களை அது பாதிக்கும் போது மட்டுமே உலக அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், தீவிரவாதத்தை நிரந்தரமாக ஒழிப்பது அவசியம் என்று கூறினார்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் தீவிரவாதிகளை உற்பத்தி செய்து, அதனை ஏற்றுமதி செய்வதுடன் தங்களை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள முயற்சியும் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தீவிரவாதத்திற்கு நிதியுதவியும் ஊக்கமும் இந்த நாடுகள் வழங்குவதாகவும் இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சர்வதேச நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிக்கும் கட்டமைப்புகளை நிரந்தரமாக மூட செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.