டெல்லியில் உறைய வைக்கும் கடும்பனி: 73வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..!!
6 February 2021, 8:33 amபுதுடெல்லி: டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் 73வது நாளாக வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 73வது நாளாக விவசாயிகள் மிகுந்த உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை, இணையதள சேவை முடக்கம், கடும் பணி என பல்வேறு தடைகளையும் கடந்து விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக காசிப்பூர் எல்லையில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர் டிராலிகளிலும், தார்ப்பாய் கூடாரங்களிலும் உறங்குகின்றனர்.
ஒருசிலர் வெறும் சாலைகளில் படுக்கையை விரித்து தூங்குகின்றனர். உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காசிப்பூர் எல்லையில் போராட்டக்களத்தை சுற்றி போலீசார் அமைத்திருந்த இரும்பு ஆணி வேலிகளை அகற்றி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்த வேலிகளை அகற்றுவதை போல, வேளாண் சட்டங்களையும் அரசு அகற்றி விடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் இந்த மோசமான வானிலையும், போலீசாரின் பாதுகாப்பு கெடுபிடிகளும் விவசாயிகளின் மனநிலையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் சர்வதேச அளவில் தங்கள் போராட்டத்திற்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
0
0