பள்ளி மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு அச்சுறுத்திய வாத்தியார்: சிறையில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!!

Author: kavin kumar
29 October 2021, 6:44 pm
Quick Share

பள்ளியின் மாடியில் இருந்து மாணவனின் கால்களை பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அஹ்ரௌராவில் “சத்பவ்னா ஹிஷன் சன்ஸ்தான் ஜூனியர்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு கடந்த 28-ம் தேதி வகுப்புகள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சோனு என்கிற மாணவர் அதிக குறும்புத்தனமும் கொண்டவராக இருந்து வந்திருக்கிறார். சில சமயங்களில் எல்லை மீறி குழந்தைகளையும், ஏன் ஆசிரியர்களையும் கூட கடித்து வைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவனது பெற்றோர் கண்டித்தும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவனை சோனு கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளார்.

உடனே தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் சோனு மன்னிப்பு கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், 2ம் வகுப்பு படிக்கும் சோனுவை பிடித்து, மேல் மாடிக்கு இழுத்துச் சென்றார். அங்கு மன்னிப்பு கேட்காவிட்டால் மாடியில் இருந்து கீழே போட்டுவிடுவதாக அவனது ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டவாறு மிரட்டி உள்ளார்.சிறுவனின் அலறல் மற்றும் அழுகையைக் கேட்ட குழந்தைகள் கூட்டம் கூடிய பிறகுதான் சோனுவை தலைமை ஆசிரியர் விடுவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதால் தற்போது தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி சிறுவனின் தந்தை கூறுகையில், ஆசிரியரின் செயல் தவறானது தான்.ஆனால் அன்பின் காரணமாக தான் இப்படி செய்திருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையில்லை என்பது போல் கூறியிருக்கிறார். கைதான தலைமை ஆசிரியர் பேசுகையில், சிறுவனின் தவறான செய்கையை சரிசெய்யுமாறு அவனது தந்தை என்னிடம் தெரிவித்திருந்தார். அதையொட்டியே சிறுவனை பயமுறுத்தும் வகையில் அப்படி செய்தேன். தவறான எண்ணத்தில் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 333

0

0