ஆடம்பர சுற்றுலா பிரியர்களுக்காக மீண்டும் வருகிறது ‘தங்கரதம்’…மசாஜ் மையம், மதுபான கூடத்துடன் கூடிய சொகுசு ரயில்..!!

17 October 2020, 5:04 pm
golden charot 2 - updatenews360
Quick Share

புதுடெல்லி: மசாஜ் மையம், மதுபானக்கூடம் மற்றும் நவீன உணவுக் கூட வசதிகளுடன் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் மீண்டும் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது.

ஆடம்பர சுற்றுலா பிரியர்களுக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

golden-chariot-1-updatenews360

இந்நிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது.

ரயிலில் உள்ள தங்கும் அறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு வசதிக்காக ஸ்மார்ட் டி.வி. வசதி செய்யப்பட்டு, அதில் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தீ எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டு உள்ளது.

பயணிகளுக்கு மன மகிழ்வை ஏற்படுத்தும் விதமாக மசாஜ் சென்டர், மதுபான கூடம், நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை ரசித்தபடி உணவு உண்ண ‘ருசி’ மற்றும் ‘நளபாகம்’ என்ற பெயரில் 2 உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த சொகுசு ரயில் கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

அதன்படி ‘Pride of Karnataka’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் மற்றும் கோவாவுக்கு செல்கிறது. ‘jewel of South’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘Glimpses of Karnataka’ என்ற பெயரில் 4 நாள் பயணமாக இயங்கும் ரெயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் செல்கிறது.

இந்த சொகுசு ரயலில் பயணம் செய்ய நபர் ஒன்றிக்கு குறைந்தபட்ச கட்டணமே லட்சத்தில் ஆரம்பம் ஆகிறது. 2 பேர் பயணம் செய்ய விரும்பினால் சில லட்சங்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரயில் பயணத்துக்கு கட்டணச்சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பஸ் பயன்பாடு, சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணங்கள், மதுபானக்கூடத்தை பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கட்டணம் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை பயணிகள் அறிந்துகொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று, ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.