‘இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்கிறது’: அமெரிக்கா பாராட்டு..!!

23 January 2021, 9:33 am
Made_in_India_Vaccine_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்வதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3ம் தேதி ஒப்புதல் அளித்தது.

அதனை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 12.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவுகள், பூட்டான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நட்பு நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக மாலத்தீவுகள், பூட்டான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

மேலும் வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இப்பணியைப் பாராட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Views: - 5

0

0