திருமணத்திற்கு மேகி ஸ்டாலை தேர்வு செய்த ஜோடி.. வேற லெவலில் ஹிட் அடித்தது!

24 January 2021, 11:01 am
Quick Share

திருமணத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தாலும், திருமணத்திற்கு வந்து வாழ்த்துபவர்களை, நன்றாக உபசரித்து, வயிறார சாப்பிட வைப்பது மிகவும் அவசியம். இதனால், திருமண விழாவில், விருந்தும் முக்கிய இடத்தை வகிக்கிறது. விருந்து இல்லாமல் திருமண விழா பூர்த்தியாகாது என நீங்கள் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். திருமணம் முடிந்த அடுத்த நொடி பந்தியை நோக்கி ஓடும் பாதிபேர் நம்மவர்களே… சரிதானே..

விருந்தினர்களை உபசரிக்க விதவிதமான யோசனைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி தங்கள் திருமண விழாவில், மேகி நூடுல்ஸ் ஸ்டால் போட்ட ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிற உணவுகளுடன், மேகி ஸ்டாலையும் அவர்கள் போட்டிருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்தியர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு துரித உணவாக மாறிவிட்டது மேகி. குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் சுவையுடன் கூடிய அவசர உணவாக இது இருப்பதால், நம் கிச்சனில் அதற்கு தனி இடம் எப்போதும் இருக்கும். இந்த பாய்ன்டை பிடித்த ஒரு ஜோடி, தங்கள் திருமணத்தில் ‘மேகி’ நூடுல்ஸ் ஸ்டால் போட, அது தாறுமாறு ஹிட் அடித்தது.

வட மாநிலத்தில் அண்மையில் நடந்த ஒரு திருமண விழாவில், விருந்தினர்களுக்காக இந்த ஸ்பெஷல் ‘மேகி’ நூடுல்ஸ் கவுண்டரை மணமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன் போட்டோவை சம்யா லகானி என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘எனது உறவினர் அவருடைய திருமண விழாவில் இதுபோன்று மேகி நூடுல்ஸ் கவுண்டரை வைத்ததற்கு அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டார்.

பலரும் ரீடுவிட், லைக்ஸ், கமெண்ட்ஸ் என அள்ளி குவிக்க அது வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. ‘எல்லா திருமணங்களிலும் இதுபோன்று மேகி ஸ்டால் இருக்க வேண்டும்’ என ஒருவர் கருத்து பதிவிட, மற்றொருவர், ‘மேகி ஸ்டால் தான் அங்கு பிரபல கவுண்டராக இருக்கும்’ என பதிவிட்டார். இன்னும் சிலர் திருமணம் நடக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, திருமண விழாவில் பங்கேற்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 4

0

0