ஏடிஎம் இயந்திரத்தில் கயிறு கட்டி காரில் இழுத்து சென்று ரூ.30 லட்சம் கொள்ளை!! தெலுங்கானாவில் துணிகரம்!!
5 February 2021, 10:39 amதெலுங்கானா : ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று உடைத்து அதில் இருந்த 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையின் ஏடிஎம் மையத்திற்குள் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை அப்புறப்படுத்தி, பின்னர் கயிறு கட்டி காரில் இழுத்து சென்றனர்.
நகருக்கு வெளியே சென்றபின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்ததாக கூறப்படும் 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். காவலாலி இல்லாத அந்த ஏடிஎம் மையத்தில் எடிஎம் எந்திரம் மாயமாகி இருப்பதை இன்று காலை பார்த்த வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்துக்குள் 4 கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் வெளி மாநிலங்களை சேர்ந்த கைதேர்ந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 4 தனிப்படைகளை தெலுங்கானா மாநில போலீஸார் அமைத்துள்ளனர்.
0
0