மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம்..! இதுவே சரியான தருணம்..! பாஜக எம்பி அனில் அகர்வால் வலியுறுத்தல்..!

10 August 2020, 10:31 am
Anil_Agarwal_UpdateNews360
Quick Share

மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அடுத்த அமர்வில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனில் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அதிகரித்து வரும் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை விரைவில் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், அனில் அகர்வால், “நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்த ஒரே வழி மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வருவதாகும்.” எனத் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் 15, 2019 அன்று, செங்கோட்டையில் இருந்து நாட்டுக்கு உரையாற்றும் போது மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றி பேசினீர்கள். இப்போது நேரம் வந்துவிட்டது. பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் பயனுள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அகர்வால் மேலும் கூறினார்.

இது தொடர்பாக ஊடகங்களுடன் பேசிய பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. அகர்வால், “ஹிந்து, முஸ்லீம்  அனைவரும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை விரும்புகிறார்கள். இந்தச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளை நீக்கும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் விகிதத்தால் சீனா விரைவில் தனது இடத்தை இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கும்.

நாட்டில் விளைநிலங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. சரியான நேரத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் இல்லை என்றால், பல பிரச்சினைகள் எழும்.” என்று கூறினார்.

இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், 2019 ஜூலை மாதம், மாநிலங்களவை எம்.பி. ராகேஷ் சின்ஹா, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2019’ஐ மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையிலும், மக்களவையில் அறிமுகப்படுத்தப்படாததால் சட்டமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.