திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் : அனைத்து ஏற்பாடுகளும் தயார்!!

18 September 2020, 6:17 pm
Tirupati Temple - updatenews360
Quick Share

ஆந்திரா : ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்கு உள்ளேயே திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

கோவில் மாடவீதிகளில் பிரம்மாண்டமான அளவில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒவ்வொரு ஆண்டு நடத்திய அனுபவம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறான வகையில் கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவை உள்ளிட்ட எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஏழுமலையான் கோவிலில் கண்கவர் வகையில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவை நடைபெறும் 23ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்.

இதற்கான அழைப்பிதழை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் முதல்வரை அமராவதியில் சந்தித்து நேரில் வழங்கினர். பிரம்மோற்சவ நாட்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து உடன் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே இப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இலவச தரிசனம் இம்மாதம் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.