ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் : கோவிலுக்குள்ளேயே நடத்த முடிவு!!

28 August 2020, 6:16 pm
Tirupati Temple - Updatenews360
Quick Share

திருப்பதி : அடுத்த மாதம் திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் ஏழுமலையானை வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக ஒரு சில உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி மூலம் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி,கரோனா கட்டுப்பாடுகள் தற்போதும் தொடர்கின்றன. எனவே செப்டம்பர் 19 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை திருப்பதி மலையில் நடை பெற இருக்கும் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரமோற்சவ சாமி ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடை பெறாது. கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து முழு அளவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவத்தை வழக்கம் போல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் மூன்று அல்லது ஆறு மாதத்தில் முதிர்வடையும் வகையில் பிக்சட் டிப்பாசிட் செய்துள்ள 12 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெற்று ஒவ்வொரு மாதமும் முதிர்வடையும் வகையில் டெப்பாசிட் செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டி வருவாயை செலவுகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள சுமார் 12 டன் தங்கத்திற்கு ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.

எனவே வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணம், தங்கம் ஆகியவற்றிற்கு அதிக வருவாய் கிடைப்பதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஏழுமலையான் என்ற திட்டத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

தற்போது மும்பை, வாரணாசி ஆகிய நகரங்களிலும், காஷ்மீரிலும் ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்ட தேவையான நிலத்தை அந்த மாநில அரசு தேவஸ்தானத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.

புதிதாக கோவில்களை கட்டுவதற்கு தேவையான நிதியை அந்தந்த மாநிலங்களில் நன்கொடைகள் மூலம் திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. தேவஸ்தானம் வங்கிகளில் செய்துள்ள டிபாசிட்களுக்கு இதற்கு முன் 6.7 சதவிகிதம் வட்டி கிடைத்து வந்தது.கரோனா காரணமாக பிக்சட் டிபாசிட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி 3.4 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே கட்டண சேவைகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் ஏழுமலையானை வழிபட விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகளை வழங்கவும், பசு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கோயிலுக்கு ஒரு கோ மாதா என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் எல்லாம் தலா ஒரு பசுவை நன்கொடையாக வழங்கவும், அனுமதி இல்லாமல் நடத்தப்படும் இறைச்சி கூடங்களை மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை மீண்டும் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன என்று அப்போது கூறினார்.