விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு.., கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!
24 August 2020, 11:48 amதிருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் உள்ள மிக முக்கிய விமான நிலையங்களான ஜெய்ப்பூர், குவஹாத்தி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்த பினராயி விஜயன், மாநில அரசு முன்வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்காத நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் ஒத்துழைப்பது சற்று கடினம்தான் எனவும் கூறியிருந்தார்.
எங்கள் விருப்பத்திற்கு முரனாக எடுக்கப்பட்டுள்ள முடிவு எனவும், இதில் பிரதமர் மோடி தலையிட்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாநில அரசு முக்கிய பங்குதாரராக உள்ள நிலையில் இதை ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்த பினராயி விஜயன், கேரள மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து வருவதை நாங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.