ஜம்முவில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

Author: Rajesh
30 December 2021, 8:55 am
Quick Share

ஜம்மு: காஷ்மீரில் நடந்த இரு வேறு என்கவுண்ட்டர்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் நேற்று மாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஷஹாபாத் பகுதியில் உள்ள நவ்ஹாம் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ்காரர் என 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்றது.

இதேபோன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

காஷ்மீரில் நடந்த இரு வேறு என்கவுண்ட்டர் (அனந்த்நாக் மற்றும் குல்காம்) சம்பவங்களில் இதுவரை 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 பயங்கரவாதிகள் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற 2 பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

Views: - 309

0

0