அனில் தேஷ்முக் விவகாரத்தில் மௌனம் காக்கும் உத்தவ் தாக்கரே..! தார்மீக அதிகாரத்தை இழந்துவிட்டதாக பாஜக குற்றச்சாட்டு..!

5 April 2021, 8:10 pm
ravi_shankar_prasad_updatenews360
Quick Share

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பாஜக இன்று, அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதை அடுத்து, உத்தவ் தாக்கரே ஆட்சி செய்வதற்கான தார்மீக அதிகாரத்தை இழந்துவிட்டார் என்று கூறியுள்ளது.

இங்கு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், அனில் தேஷ்முக் மாநில உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தாக்கரேவுக்கு தார்மீக பொறுப்பு இல்லையா என்று கேள்வியெழுப்பினார்.

சச்சின் வேஸ் வழக்கு மற்றும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் தேஷ்முக் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு ரவிசங்கர் பிரசாத், உத்தவ் தாக்கரேவின் அரசாங்கத்தின் கீழ் பல பெரிய சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.

“அவர் ஆட்சி செய்வதற்கான தார்மீக அதிகாரத்தை இழந்துவிட்டார். ஜனநாயகம் பொறுப்பு மற்றும் கடமையால் இயங்குகிறது. உத்தவ் தாக்கரேவின் தொடர்ச்சியான வெளிப்படையான மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது.” என அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சரை விமர்சித்த அவர், அனில் தேஷ்முக் என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்து ராஜினாமா செய்வதற்கு முன்னர் தனது அனுமதியைக் கோரினார். அதே நேரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.

முதற்கட்ட விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் சிபிஐவிடம் கோரியுள்ளதைக் குறிப்பிட்டு ரவிசங்கர் பிரசாத், இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் இணைப்புகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது மற்றும் தொழிலதிபர் மன்சுக் ஹிரென் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு, சச்சின் வேஸை கைது செய்த பிறகு பல விஷயங்கள் அம்பலமாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தேஷ்முக் தனக்காகவோ, தனது கட்சியான என்சிபிக்காகவோ அல்லது மாநில அரசாங்கத்திற்காகவோ வேஸ் மூலம் பணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தான் ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“நிச்சயமாக பல இணைப்புகள் இருக்கலாம். ஊழலின் இந்த மோசமான நடத்தையின் அனைத்து இணைப்புகளும் சரியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த தொடர்பு அனைத்தும் கொள்ளையடிக்கும் சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகிறது, அதில் வேஸ் ஒரு பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். யார் யாருக்கு ஆதரவளித்தனர், யார், யார் யாரைக் காப்பாற்றுகிறார்கள்? எல்லா அம்சங்களையும் ஆராய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

தேஷ்முக் வேஸ் மூலம் ரூ 100 கோடி மாமூல் வசூலிக்கும் இலக்கை நிர்ணயித்ததாக பரம் பிர் சிங் கூறிய குற்றச்சாட்டைக் குறிப்பிட்ட ரவிசங்கர் பிரசாத், “இது மும்பையில் ஒரு அமைச்சரின் இலக்காக இருந்தால், முழு மாநிலத்திற்கும் மற்ற அமைச்சர்களின் இலக்கு என்னவாக இருக்கும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Views: - 31

0

0