பைக்கில் டிரிப்பிள்ஸ் போன இளைஞர்கள்! பிடிக்க போன போலீசுக்கு நேர்ந்த கதி

3 April 2021, 10:15 am
Quick Share

ஹரியானாவில் பைக்கில் டிரிப்பிள்ஸ் போன இளைஞர்கள், போலீசாரை பார்த்ததும், அபராதத்திலிருந்து தப்பிக்க எண்ணி, தங்கள் பைக்கை வேகமாக ஓட்டிய போது, போலீசார் ஒருவரை இடித்து தள்ளினர். இதில் அந்த போலீஸ் படுகாயம் அடைந்திருக்கிறார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது டிராபிக் போலீசாரின் முக்கிய பணி. விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்கும் போது, சில சமயம் அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன. இதில் பெரும்பாலும் வாகன ஓட்டிகளே பாதிக்கப்படுவர். ஆனால் ஹரியானாவில் நடந்த ஒரு சம்பவத்தில், போலீசார் படுகாயம் அடைந்திருக்கிறார்.

ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் உள்ள சிர்சா சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை பிடித்து, டிராபிக் போலீசார் அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது, பைக் ஒன்றில், 3 இளைஞர்கள் டிரிப்பிள்ஸ் வந்துள்ளனர். சாலையில் போலீசார் நிற்பதை பார்த்த, பைக் ஓட்டி வந்த இளைஞர், சிக்கினால் அபராதம் தான் என உணர்ந்து, பதற்றத்தில் தனது பைக்கை வேகமாக இயக்கி இருக்கிறார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த இளைஞர், அங்கிருந்த போலீசார் ஒருவர் மீது பயங்கரமாக மோதிவிட்டார். தப்பித்தால் போதும் என அங்கிருந்து அந்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடி விட்டனர். பாவம்.. அந்த போலீஸ்காரர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்திருக்கிறார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த சக போலீசார், இடித்துவிட்டு தப்பிய இளைஞர்களை வலைவீசி தேடி, மூவரையும் கைது செய்துள்ளனர். பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டினால், நாம் பாதிப்பது மட்டுமன்றி, நம்மால் பிறருக்கும் தொல்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

Views: - 0

0

0