ஒரே நாளில் மேலும் இரண்டு பாலியல் பலாத்காரங்கள்..! என்ன நடக்கிறது உத்தரபிரதேசத்தில்..?
1 October 2020, 12:30 pmஹாத்ராஸ் மற்றும் பால்ராம்பூரில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த இரு சம்பவங்களுக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மற்றும் அசாம்கர் மாவட்டங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் பலாத்கார சம்பவங்களால் ஹாத்ராஸ் மற்றும் பால்ராம்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் இறந்த சில மணி நேரங்களிலேயே புதிய கற்பழிப்பு சம்பவம் வந்துள்ளது.
அசாம்கரில், ஜியான்பூர் பகுதியில் 8 வயது சிறுமி தனது 20 வயது அண்டை வீட்டாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. “இன்று (புதன்கிழமை), ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியின் வீட்டிற்கு எதிரில் வசித்து வருகிறார். மேலும் அவரது வீட்டிற்கு தினமும் தவறாமல் சென்று வருவார்” என்று எஸ்.பி சுதிர் குமார் சிங் கூறினார்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அசாம்கர் எஸ்.பி. சுதிர் குமார் சிங் மேலும் தெரிவித்தார்.
இதேபோல் புலந்த்ஷாரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ககூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு ஒரு டீனேஜ் பெண் தனது அண்டை வீட்டாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“அவரது தந்தையின் புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று புலந்த்ஷாஹர் எஸ்எஸ்பி சந்தோஷ்குமார் சிங் தெரிவித்தார்.