உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்..! கொரோனாவுக்கு பலியான சோகம்..!

2 August 2020, 11:31 am
kamal_updatenews360
Quick Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் இன்று தனது 62’வது வயதில் காலமானார். கமல் ராணி வருணுக்கு ஜூலை 18 அன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அவர் இறந்தார்.

கமல் ராணி வருண் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக பணியாற்றினார். கான்பூரின் கட்டாம்பூரில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முக்கிய போராளியாக அவர் அறியப்பட்டார். அங்கு அவர் 2017’இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சர் காலமானதற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். “அமைச்சர் கமலா ராணி வருணின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கொரோனா தொற்றுக்காக எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் ஒரு பிரபலமான மக்கள் தலைவர் மற்றும் ஒரு சமூக சேவகர் ஆவார். அவர் அமைச்சரவையின் அங்கமாக இருந்தபோது திறமையாக பணியாற்றினார்.” என யோகி ஆதித்யநாத் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் தனது கடைசி பதிவுகளில், கமல் ராணி ஸ்மார்ட் இந்தியா ஹேக்காதானில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மறு ட்வீட் செய்து, மாநிலங்களவை எம்.பி. அமர் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

ராணி 11 மற்றும் 12’வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அவர் 1996-97 வரை தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழில்துறை குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். 1997’ஆம் ஆண்டில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.

1998’இல், அவர் இரண்டாவது முறையாக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 1999 வரை, அதிகாரப்பூர்வ மொழிக் குழு, தொழிலாளர் நலத்துறைக் குழு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் உறுப்பினராக பணியாற்றினார்.

Views: - 11

0

0