முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ராகுல் காந்தி..! முன்னிலைப்படுத்தப்படும் பிரியங்கா..! காங்கிரசுக்குள் நடக்கும் அதிரடி மாற்றம்..!

21 January 2021, 1:57 pm
priyanka_calendar_updatenews360
Quick Share

2022 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, பிரியங்கா காந்தியை மட்டும் முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள காலண்டர் மூலம், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர மக்களை சென்றடைய உத்தரபிரதேச காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் மருந்துக்குக் கூட சோனியா மற்றும் ராகுலின் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு பகுதியாக இந்த காலெண்டர்களுடன் வீடு வீடாக பிரச்சாரத்தை நடத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், காலண்டரின் 10 லட்சம் பிரதிகள் உ.பி.யில் உள்ள கட்சி பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 12 பக்க டேப்லெட் காலண்டரில் ஒவ்வொரு பக்கத்திலும் பிரியங்காவின் புகைப்படம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரியங்கா காந்தி சுறுசுறுப்பான அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், காலண்டர் அவரது அரசியல் பயணத்தை உயர்த்திச் செல்லும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

புகைப்படங்களில், பிரியங்கா சோன்பத்ராவில் உள்ள ஆதிவாசி பெண்களுடன் உரையாடுவது, அமேதியில் பெண்களைச் சந்திப்பது, உஜ்ஜைனில் உள்ள மகாகாளி கோவிலில் பிரார்த்தனை செய்வது, லக்னோவில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பது, வாரணாசியில் ரவிதாஸ் ஜெயந்தியில் கலந்துகொள்வது, ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பது , தேர்தல் பேரணியில் உரையாற்றுவது, அசாம்கரில் குழந்தைகளைச் சந்திப்பது மற்றும் ஹரியானாவில் ஒரு ரோட்ஷோவில் பங்கேற்பது ஆகியவை பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கட்சி வட்டாரங்களின்படி, காலண்டர் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும். மேலும் 2022’ல் நடைபெறவிருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், பிரியங்கா தலைமையில் கட்சியை மேம்படுத்துவதற்காக முழு முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் 2022’இல் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அகில இந்திய அளவில் முழு வீழ்ச்சியை சந்தித்துள்ள காங்கிரஸ், ராகுல் காந்தி மூலம் எழுச்சி பெற வாய்ப்பே இல்லை எனக் கூறப்படும் சூழலில், நீண்ட கால அடிப்படையில், அகில இந்திய அளவில் பிரியங்காவை முன்னிலைப்படுத்துவதற்கான முன்னோட்டமாக, தற்போது முழு வேகத்தில் உத்தரபிரதேசத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார் என கட்சியில் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0