சண்டையே போடாத கணவர்..! வாழ்க்கை ரொம்ப போர்..! விவாகரத்துக் கேட்டு நீதிமன்றப் படியேறிய புதுமைப் பெண்..!

22 August 2020, 2:42 pm
Muslim_Woman_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் ஒரு பெண், திருமணமாகி 18 மாதங்களுக்குப் பிறகு, தற்போது தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்து கோர சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர், நீதிமன்றத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆம், விவாகரத்துக்காக அவர் கூறிய காரணம் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

விவாகரத்து மனுவை தாக்கல் செய்த அந்த பெண், தனது கணவரின் அதீத அன்பை ஜீரணிக்க முடியாது என்று கூறினார். கடந்த 18 மாதங்களில் தனது கணவருடன் ஒருபோதும் சண்டையிடவில்லை என்றும், இதனால் மனரீதியாக தான் சோர்வடைந்து விட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

அந்தப் பெண் தனது கணவர் சமைப்பதற்கும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் கூட உதவுகிறார் என்றார். “அவர் [கணவர்] ஒருபோதும் என்னிடம் கத்தவில்லை. எந்தவொரு பிரச்சினையிலும் அவர் என்னை ஏமாற்றவில்லை. இத்தகைய சூழலால் நான் மூச்சுத் திணறலை உணர்கிறேன்” என்று அந்த பெண் தனது மனுவில் கூறியுள்ளார்.

“நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் எப்போதும் என்னை மன்னிப்பார். ஆனால் நான் அவருடன் வாதிட விரும்பினேன்.” என்று அவர் கூறினார். தான் சொல்லும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளும் கணவருடனான வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

விவாகரத்துக்கான காரணத்தைக் கேட்ட ஷரியா நீதிமன்றத்தின் மதகுரு, அவரது மனுவை நிராகரித்து, இது மிகவும் அற்பமான காரணம் என்று குறிப்பிட்டார்.

விவாகரத்துக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று மதகுரு அந்தப் பெண்ணை கேட்டார். அதற்கு அவர் அவ்வாறு எதுவும் இல்லை என பதிலளித்தார். இந்த வேண்டுகோளை மதகுரு ஏற்க மறுத்ததை அடுத்து, உள்ளூர் பஞ்சாயத்து ஒன்று இந்த விஷயத்தை விசாரித்தது. ஆனால் அதுவும் இதற்கு தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஒரு சரியான கணவனாக மட்டுமே இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு தனது மனைவியைக் கேட்டுக்கொள்ள அவர் ஷரியா நீதிமன்றத்தில் முறையிட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்து, இந்த விஷயத்தை தாங்களே தீர்த்துக்கொள்ளுமாறு தம்பதியிடம் கேட்டுக் கொண்டது.

Views: - 45

0

0