இறையாண்மையைக் காக்க இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்..! வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ அதிரடி..!

27 October 2020, 6:23 pm
Mike_Pompeo_Rajnath_Singh_UpdateNews360
Quick Share

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று, சீனாவை இந்தியாவுடனான அதன் சமீபத்திய எல்லை மோதல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பருடன் புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்ட பிறகு இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

தனது இறையாண்மையை பாதுகாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு தனது நாட்டின் ஆதரவை வெளிப்படுத்திய பாம்பியோ, சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்துடன் நட்பு கிடையாது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கூறினார்.

“சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் கொஞ்சம் கூட நட்புடன் இல்லை என்பதை எங்கள் தலைவர்களும் குடிமக்களும் அறிந்துள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என மைக் பாம்பியோ கூறினார்.

“கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 20 பேர் உட்பட, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்காக தியாகம் செய்த இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்களை கௌரவிப்பதற்காக நாங்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டோம். அமெரிக்கா அவர்களின் இறையாண்மை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது இந்தியாவுடன் துணை நிற்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் பாம்பியோவுக்கு பதிலளித்த சீனா, சீனாவிற்கும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை தீவிரமாக்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

பாம்பியோவின் தாக்குதல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

“இவை பனிப்போர் மனநிலை மற்றும் கருத்தியல் சார்புகளுடன் ஒட்டிக்கொண்டிருப்பதை பிரதிபலிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

பனிப்போர் மற்றும் பூஜ்ஜிய தொகை விளையாட்டு மனநிலையை கைவிட்டு, சீனாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை விதைப்பதை நிறுத்துவதோடு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுமாறு நாங்கள் அவரை கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறினார்.

Views: - 15

0

0