கபீல் கானுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் நீட்டிப்பு..! உத்தரபிரதேச அரசு அதிரடி..!
16 August 2020, 5:45 pmகபீல் கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பதை உத்தரபிரதேச அரசு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் போது 2019 டிசம்பர் 10’ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்திய குற்றச்சாட்டில் கான் ஜனவரி 29 முதல் சிறையில் உள்ளார்.
ஆகஸ்ட் 4, 2020 தேதியிட்ட உத்தரவில், அலிகார் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 2020 பிப்ரவரி 13 அன்று கானுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் (என்எஸ்ஏ) போடப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர், இந்த விவகாரம் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையில், கபீல் கானை சிறையில் அடைக்க போதுமான காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. இதன் விளைவாக, மே 6’ஆம் தேதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரது காவலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் மூலம் கபீல் கான், 2020 நவம்பர் 13 வரை சிறையில் இருப்பார் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரியில் 2017’ஆம் ஆண்டு ஏற்பட்ட சோகத்திற்குப் பிறகு கபீல் கான் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆரம்பத்தில், அவசர ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்ததற்காக அவர் குழந்தைகளுக்கான மீட்பர் என்று பாராட்டப்பட்டார். ஆனால் பின்னர், விசாரணையில் அவர் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருக்காமல் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து நடவடிக்கையை எதிர்கொண்டார்.
அவருடன் மேலும் ஒன்பது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.