சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி: உத்தரபிரதேச அரசு நடவடிக்கை..!!

28 January 2021, 10:41 am
ayothi tour - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம்: சர்வதேச அளவில் அயோத்தி நகரை ஹிந்து மத மற்றும் சுற்றுலா மையமாக மாற்ற உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி துவங்கியுள்ளது. அதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டும் பணியும், நேற்று முன்தினம் துவங்கியது.

இந்நிலையில், அயோத்தியை சர்வதேச அளவில், ஹிந்து மத மற்றும் சுற்றுலா மையமாக மாற்ற, உ.பி., அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, ஹிந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக, அயோத்தியை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆன்மிக நகரமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும், ராமர் கோவிலுக்குச் செல்ல நான்கு வழி விரைவு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க, 450 கோடி ரூபாய் செலவில், 158 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தமன் ராமன் விமான நிலையம்’ என, பெயர் வைக்கவும் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக அயோத்தியை பசுமை நகரமாக மாற்றும் வகையில் அரசு விடுதிகள், ஓட்டல்கள், வெளி மாநிலங்களின் இல்லங்கள் ஆகியவற்றை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, அந்நகரில் மிகப் பெரிய குடியிருப்பு வளாகம் கட்டப்பட உள்ளது. வரும், 2023ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். அதேநேரத்தில், அயோத்தியும் உலக தரம் வாய்ந்த நகரமாக காட்சியளிக்கும் என அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Views: - 23

0

0