உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 கடற்படை வீரர்கள் சடலமாக மீட்பு: 2 பேரை தேடும் பணி தீவிரம்..!!
Author: Aarthi Sivakumar3 October 2021, 9:05 am
டேராடூன்: உத்தரகாண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான இந்திய கடற்படை வீரா்கள் 4 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்றத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், 20 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். இவர்களில் கடற்படையை சேர்ந்த 10 வீரர்கள் சிகரத்தின் உச்சிக்கு செல்வதற்கான பயணத்தை நேற்று தொடங்கினர். அப்போது, அப்பகுதியில் எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 6 வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 10 பேரை கொண்ட மலையேற்ற வீரர்களில் 4 பேர் பாதுகாப்பாக இருக்கின்றனர். மாயமான 6 பேரை தேடும் பணியில் கடற்படை, ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டது.
இந்நிலையில், மாயமான 6 பேரில் 4 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
0
0