உத்தரகாண்ட் மழை வெள்ளம்; ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அமித்ஷா

Author: kavin kumar
21 October 2021, 9:00 pm
Quick Share

உத்தராகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர்.பலரை காணவில்லை.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆளுநர் குர்மித் சிங் ஆகியோரும் உடன் சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா பேசுகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,10க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், இரு மலையேறும் குழுக்கள் காணாமல் போன நிலையில், ஒரு குழு கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் நிறுவனங்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து பணிகளை மேற்கொண்டதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நைனிடால், அல்மோரா, ஹல்த்வானி பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மழை வெள்ளத்தில் எந்த சுற்றுலாப் பயணியும் உயிரிழக்கவில்லை என்றும், மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேர் மீட்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார்.

Views: - 335

0

0