பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் சமூக ஊடக நடத்தைகள் ஆராயப்படும்: உத்தரகண்டில் புதிய நடைமுறை..!!
5 February 2021, 6:06 pmடேராடூன்: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்களின் சமூக ஊடக செயல்பாடுகளை ஆராய்வதற்கு உத்தரகண்ட் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.
வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும் போது அவர் மீது ஏதேனும் வழக்குகள் பதிவாகியிருக்கின்றதா என்று உறுதி செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. இந்நிலையில் உத்தரகண்ட் காவல்துறை டி.ஜி.பி., பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் செயல்பாடுகளையும் ஆராயப்பட வேண்டும் என வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் தலைமையில் நடைபெற்ற போலீசார் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து, டி.ஜி.பி., அசோக் குமார் கூறியதாவது, சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது பெருகி வருகிறது. அதனை தடுக்க விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தை மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆராயப்பட வேண்டும். புதிதாக எதையும் அறிமுகப்படுத்தவில்லை. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் பாஸ்போர்ட் தரக்கூடாது என ஏற்கனவே உள்ள விதிமுறைக்கு ஆதரவாக மட்டுமே பேசியுள்ளேன்.
அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ள தேச விரோத நடவடிக்கைகளுக்கு, ஒரு காவல்துறை அதிகாரி என்ற முறையில் நான் எதிராக நிற்கிறேன். சமூக ஊடகங்களின் பெருகி வரும் தவறான நடத்தைகளை தடுக்கவும், பயனர்கள் செய்தி அனுப்பும் போது அதிக பொறுப்புடன் இருக்கவும் இந்நடவடிக்கை உதவும் என கூறியுள்ளார்.
0
0