உ.பி. தள்ளுமுள்ளுவில் பெண் காவலரின் ஆடை கிழிப்பு : ராகுல் காந்தி, பிரியங்கா மீது வழக்குப்பதிவு

By: Babu
2 October 2020, 1:40 pm
Quick Share

கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது உ.பி. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த 19 வயதுடைய தலீத் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கழுத்து எலும்பை உடைத்து, நாக்கையும் அறுத்திருப்பதாக வெளியான தகவலும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்தது.

இந்த நிலையில், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். ஆனால், ஹத்ராஸ் பகுதிக்கு 120 கி.மீ. முன்னதாகவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர்.
மேலும், ஹத்ராஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், யாருக்கும் அனுமதி கிடையாது என போலீசார் விளக்கிக் கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தே ஆக வேண்டும் எனக் கூறி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களை பின்தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், நிலைதடுமாறிய ராகுல் காந்தி கீழே விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை கைது செய்து சென்ற போலீசார், மாலையில் இருவரையும் விடுவித்தனர்.

இந்த நிலையில், தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தொண்டர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது, பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவரின் சீருடை கிழிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 50

0

0