தாய் மொழியைப் புறக்கணித்தால் சுய அடையாளத்தை இழக்க நேரிடும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு..!!

Author: Aarthi
1 August 2021, 4:45 pm
Quick Share

புதுடெல்லி: ஒருவர் தாய் மொழியைப் புறக்கணித்தால் தமது சுய அடையாளம் மற்றும் சுயமரியாதையையும் இழக்க நேரிடும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு எச்சரித்துள்ளார்.

தாய்மொழிகளைப் பாதுகாப்பது குறித்து தெலுகு கூட்டமி ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கருத்தரங்கில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றிற்கு புத்துணர்ச்சியூட்டவும், புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை எனக் கூறினார்.


மக்கள் இயக்கத்தால் மட்டுமே மொழிகளைப் பாதுகாக்க முடிவதோடு, அவற்றின் தொடர்ச்சியான நிலையை உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்திய அவர், மொழியின் பாரம்பரியத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் மக்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

vice-president-m-venkaiah-naidu

இந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான, மக்களால் உந்தப்பட்ட முன்முயற்சிகள் குறித்துப் பேசுகையில், ஒரு மொழியை வளப்படுத்துவதில் மொழிபெயர்ப்பு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பழமையான இலக்கியங்களை இளைஞர்களுக்குப் புரியும் வகையில் பேச்சு வழக்கில் உருவாக்கவும் குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தினார்.

ஊரக பகுதிகளைச் சேர்ந்த மொழிகளில் உள்ள அழிந்து வரும் மற்றும் தொன்மையான வார்த்தைகள் மற்றும் பல்வேறு வட்டார மொழிகளைத் தொகுத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒருவர் தாய் மொழியைப் புறக்கணித்தால், தமது சுய அடையாளம் மற்றும் சுயமரியாதையையும் இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

நமது தாய்மொழியைப் பாதுகாப்பதால் மட்டுமே இசை, நடனம், நாடகம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், பாரம்பரிய அறிவு போன்ற பல்வேறு அம்சங்களைப் பராமரிக்க இயலும் என்றார் அவர். 21 ஆண்டுகள் நீடித்த திருமணம் சார்ந்த வழக்கு ஒன்றில் பெண்ணொருவர் ஆங்கிலம் சரளமாகப் பேச இயலவில்லை என்று தெரிவித்ததையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, அந்தப் பெண்ணின் தாய்மொழியான தெலுங்கில் பேச அனுமதி அளித்ததை அடுத்து இந்த வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்ததை வெங்கய்ய நாயுடு சுட்டிக்காட்டி, தலைமை நீதிபதியின் முன்முயற்சியைப் பாராட்டினார்.

இதன்மூலம் நீதிமன்றங்களில் பொதுமக்கள் தங்களது தாய் மொழிகளில் உரையாற்றுவது, நீதிமன்ற உத்தரவுகளைப் பிராந்திய மொழிகளில் வழங்குவதன் அவசியத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார். புதியக் கல்வி ஆண்டு முதல் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், பல்வேறு இந்திய மொழிகளில் பாடங்களை வழங்க அண்மையில் முடிவெடுத்துள்ளதை அவர் பாராட்டினார்.

அதேபோல, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். தாய் மொழிகளைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த நடைமுறைகளை சுட்டிக்காட்டிய வெங்கையா நாயுடு, மொழி ஆர்வலர்கள், மொழியியலாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊடகத் துறையினர் போன்றவர்கள் இந்த நாடுகளின் நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பெருவாரியான மக்களைச் சென்றடையும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களை இந்திய மொழிகளில் மேம்படுத்துமாறும் அவர் யோசனை தெரிவித்தார்.

Views: - 201

0

0