டிரான்ஸ்பரான வாத்தியார்! தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய ஆதிவாசி மக்கள்

4 February 2021, 8:52 am
Quick Share

ஆந்திராவில் அடிப்படை வசதியில்லாத அரசு பள்ளி ஒன்றில், 10 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், பணிமாறுதல் பெற்று செல்லும் போது, அவரை தோளில் தூக்கி வைத்து ஆடல், பாடல்களுடன் உற்சாக நடனமாடி ஆதிவாசி மக்கள் வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் மல்லுகுடா என்ற கிராமம் உள்ளது. ஆதிவாசி இனத்தை சேர்ந்த மக்கள் வாழும், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் நரேந்திரா என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் மாணவர்கள் வகுப்புகளை கவனிப்பதை கண்ட நரேந்திரா, பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி, அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி, தேவையான வசதிகளை பெற்று தந்து, பள்ளியை சீரமைத்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை கண்ணாக கருதிய நரேந்திரா, தினமும் 20 கிலோ மீட்டர் பைக்கில் பயணித்து பள்ளிக்கு வந்து பாடம் கற்பித்திருக்கிறார். மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற துவங்கியிருக்கிறார். இதனால் விரைவில், ஆதிவாசி மக்களின் அன்பையும் நரேந்திரா பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மல்லுகுடாவில் ஆசிரியர் பணியாற்றிய அவருக்கு, தற்போது விஜயநகரத்திற்கு பணிமாறுதல் கிடைத்துள்ளது.

இதனையறித்த ஆதிவாசி மக்கள், அவரை சிறப்பாக வழியனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். அவரை தோளில் தூக்கி சுமந்த ஆதிவாசி மக்கள், ஆடல், பாடலுடன் வீதியில் ஊர்வலமாக வலம் வந்தனர். அவருக்கு பாதபூஜையும் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திரா, ‘‘எனக்கு இவ்வளவு சிறப்பாக பிரியாவிடை அளிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதினர். கிராமம் முழுவதும் திருவிழா போல் இருந்தது. ஆடி, பாடியது மட்டுமன்றி, உணவு சமைத்து கிராமம் முழுவதும் பரிமாறினர். நான் செல்கிறேன் என்பதை அறிந்து குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுடனே இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். 10 ஆண்டுகள் அவர்களுடன் இருந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’’ என்றார்.

Views: - 0

0

0