பூமி பூஜைக்கு தேதி குறித்துக் கொடுத்த ஜோதிடருக்கு கொலை மிரட்டல்..! போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ள அரசு..!

4 August 2020, 11:59 am
Ram_temple_Ayodhya_UpdateNews360
Quick Share

அயோத்தியில் மீண்டும் புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்வதற்கான தேதியை நிர்ணயித்த பண்டிட் என்.ஆர் விஜயேந்திர சர்மா பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.

பூமி பூஜையின் முகூர்த்த தேதியை மாற்றுவதற்காக நாடு முழுவதும் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் தனக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக கர்நாடகாவின் பெலகாவியில் வசிக்கும் பண்டிட் சர்மா தெரிவித்துள்ளார்.

“ஆகஸ்ட் 5’ஐ பூமி பூஜையின் தேதியாக ஏன் நிர்ணயித்தீர்கள்? ஏன் விழாவில் பங்கேற்க விரும்புகிறீர்கள்” என்று போன் செய்து மிரட்டியவர்கள் தன்னிடம் கேட்டதாக அவர் கூறினார். விழா அமைப்பாளர்கள் அவரை அணுகியபோது குருவாக தனது கடமையைச் செய்ததாக அவர் கூறினார். மேலும், போன் செய்தவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்லவில்லை என்று பண்டிட் சர்மா மேலும் கூறினார்.

பெலகாவியின் திலக்வாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தொலைபேசி அழைப்புகள் மூலம் வந்த கொலை மிரட்டல்களை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பண்டிட் சர்மா கூறினார்.

முன்னதாக பிப்ரவரியில், அமைப்பாளர்கள் பண்டிட் ஷர்மாவை அணுகி, பூமி பூஜைக்கான தேதியை நிர்ணயித்தனர். முன்னர் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்ட, சர்மா ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் அக்ஷயா திரிதியின் தேதியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பின்னர் அது கொரோனா தொற்றுநோயால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்மா பின்னர்ஜூலை 29, ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய நான்கு தேதிகளை முன்மொழிந்தார்.

“ஆகஸ்ட் 5 வாஸ்து முகூர்த்தத்திற்கு ஏற்றது மற்றும் பூமி பூஜைக்கு ஏற்றது. மதியம் 12 மணிக்கு முன்னதாக அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். அதன் பிறகு ராகு காலம் வருகிறது.’’ என்று பண்டிட் சர்மா கூறியிருந்தார்.

எட்டு மொழிகள் தெரிந்த பண்டிட் என்.ஆர்.விஜயேந்திர சர்மா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர் மற்றும் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முக்கிய அரசியல்வாதிகளுக்கான ஜோதிடராக இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். வாஜ்பாய் பிரதமராக பதவியேற்கும் தேதியை பரிந்துரைத்ததும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0