திபெத்திய வீரர்களை வைத்தே சீனாவை விரட்டிய இந்தியா..! பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் விகாஸ் பட்டாலியன்..!

2 September 2020, 4:25 pm
VIKAS_REGIMENT_UpdateNews360
Quick Share

சீன ராணுவத்தை வீழ்த்திய இந்தியாவின் இரகசிய சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப்) பற்றிய பிரமிக்கவைக்கும் தகவல்கள் சமூக ஊடகங்களை கலக்கி வருகின்றன. இந்த சிறப்புப் படை தான் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில், சீனாவிற்கு பலத்த அடி கொடுத்து மூலோபாய உயரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

விகாஸ் பட்டாலியன் என்றும் அழைக்கப்படும் எஸ்.எஃப்.எஃப் பிரிவு பாங்கோங் ஏரியில் உயரமான இடத்தைக் கைப்பற்றியதில் முக்கியப் பங்கு வகித்ததாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் எல்லையில் நிலையை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி மூலோபாய சிந்தனையாளர் பிரம்மா செல்லானி, சுஷுல் பகுதியில் உயரமான இடத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் வெற்றியைக் குறிப்பிட்டார். இது ஒரு தந்திரோபாய நன்மையைப் பெறுவதற்கும், சீன ராணுவத்தை எதிர்ப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

மிகவும் மர்மமான ஆயுதப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் எஸ்.எஃப்.எஃப் இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது அமைச்சரவை செயலகத்தில் பாதுகாப்பு இயக்குநரகம் மூலம் நேரடியாக பிரதமருக்கு அறிக்கை அளிக்கிறது.

பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் விகாஸ் பட்டாலியன் :
1962’ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்த பின்னர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, உளவுத்துறையான ஐபி நிறுவனர் மற்றும் இயக்குனர் போலா நாத் முல்லிக் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மூத்த வீரர் பிஜு பட்நாயக்அவர்களின் ஆலோசனையின் பேரில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வழக்கமாக ஊடுருவுவதைத் தடுக்க அனைத்து திபெத்திய ஆயுதப் பிரிவையும் எழுப்ப முடிவு செய்தார்.

இதையடுத்து எஸ்.எஃப்.எஃப் நவம்பர் 14,1962 அன்று முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இது உத்தரகண்ட் மாநிலத்தின் சக்ரதாவில் அமைந்துள்ளது. இந்த படை முதலில் இந்திய உள்நாட்டு உளவுத்துறை ஐபியால் நேரடியாக மேற்பார்வையிடப்பட்டது. பின்னர் இது ரா தோற்றுவிக்கப்பட்ட பின்னர் அதனுடன் இணைக்கப்பட்டது.

முதல் கட்டத்தில், 5,000’க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, இந்தியாவின் ஐபி மற்றும் எஸ்எஃப்எப்பின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் சுஜன் சிங் உபன் ஆகியோரால் பயிற்சி பெற்றனர். சீனாவுக்கு எதிராக இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இதன் முக்கிய பணியாகும்.

சிஐஏ ஏற்கனவே 1950’களில் இருந்து சீன ராணுவத்தை எதிர்த்துப் போராட திபெத்திய கொரில்லாக்களுக்கு பயிற்சி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் ஈகிள் முதல் ஆபரேஷன் விஜய் வரை
அமெரிக்கர்களுக்கு முன், பிரிட்டிஷ் இந்திய இராணுவம் திபெத்தியர்களை உளவாளிகள் மற்றும் இரகசிய போராளிகளாக ‘தி கிரேட் கேமில்’ ரஷ்யாவை எதிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஆட்சேர்ப்பு செய்தது.

இயற்கையாகவே இமயமலையின் தீவிர வானிலை மற்றும் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு, திபெத்திய கொரில்லாக்கள் உளவுத்தகவலைச் சேகரிப்பதைத் தவிர எதிரிகளின் எல்லைக்கு அப்பால் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பணிபுரிந்தனர்.

ஆபரேஷன் ஈகிள் (1971 பங்களாதேஷ் போரின்போது சிட்டகாங் மலைகளைப் பாதுகாத்தல்), ஆபரேஷன் புளூஸ்டார், ஆபரேஷன் மேக்தூட் (1984’இல் சியாச்சின் பனிப்பாறை மீது இந்தியாவின் கட்டுப்பாட்டை நிறுவுதல்) மற்றும் ஆபரேஷன் விஜய் (கார்கில் 1999 போர்) போன்ற பல நடவடிக்கைகளில் எஸ்.எஃப்.எஃப் பங்கேற்றது.

தலாய் லாமாவுக்கு மிகவும் விசுவாசமான திபெத்திய போர்வீரர்களான இவர்கள் எல்லையில் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை சீனாவைத் திணறடித்தது மட்டுமல்லாமல், இந்திய ஆதரவு திபெத்திய வீரர்களே சீனாவை தோற்கடிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

Views: - 7

0

0