“நாங்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல”..! பாகிஸ்தானுக்கு காட்டமாக பதிலளித்த ஃபாரூக் அப்துல்லா..!

30 August 2020, 3:26 pm
farooq_abdullah_updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் ஆறு அரசியல் கட்சிகள் 370’வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக கூட்டாகப் போராடுவதாக உறுதியளித்து அண்மையில் குப்கர் பிரகடனத்தை வெளியிட்ட நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலளித்த தேசிய மாநாட்டின் (என்.சி) தலைவர் ஃபாரூக் அப்துல்லா “நாங்கள் யாருடைய கைப்பாவைகளும் இல்லை” என்று வலியுறுத்தினார்.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, என்.சி, பி.டி.பி, காங்கிரஸ் மற்றும் மூன்று கட்சிகள் வெளியிட்ட அறிவிப்பை “ஒரு வழக்கமான நிகழ்வு அல்ல. ஆனால் ஒரு முக்கியமான வளர்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளை பாகிஸ்தான் எப்போதுமே துஷ்பிரயோகம் செய்துள்ளது. ஆனால் இப்போது திடீரென்று அவர்கள் எங்களை விரும்புகிறார்கள்” என்று முன்னாள் முதல்வர்ஃபாரூக் அப்துல்லா காட்டமாக பதிலளித்துள்ளார். 

“புது டெல்லி, இஸ்லாமாபாத் என நாங்கள் யாருடைய கைப்பாவைகளும் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பதிலளிக்கிறோம். அவர்களுக்காக உழைப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்துல்லா, “ஆயுதமேந்தியவர்களை காஷ்மீருக்கு அனுப்புவதை நிறுத்துமாறு நான் பாகிஸ்தானை கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மாநிலத்தில் நடந்த இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போராட உறுதிபூண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி அரசியலமைப்பற்ற முறையில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவை உட்பட எங்கள் உரிமைகளை அமைதியான முறையிலேயே மீட்டெடுக்க விரும்புகிறோம்.” என்று மேலும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அனைவரின் சிறந்த நலனுக்காக, தங்கள் உரையாடலை மீண்டும் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

“ஒவ்வொரு முறையும் யுத்த நிறுத்த மீறல்கள் நிகழும்போது எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் இருபுறமும் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள். கடவுளின் பொருட்டு அதை நிறுத்துங்கள்” என்று அவர் கூறினார்.