300 இடங்களுக்கும் மேல் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம் : யோகி ஆதித்யநாத் நம்பிக்கை…!

4 July 2021, 11:03 pm
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனா கட்சி 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மீண்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேசத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களைப் பிடித்துள்ளது. இதற்காக பாஜக தொண்டர்களுக்கு நன்றி. 2022ம் ஆண்டில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும்.

பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டலில்தான் இந்த வெற்றி கிடைத்தது. திட்டமிட்டு செயல்பட்டு இந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது. 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து வென்றுள்ளது. 2022 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவே வெல்லும். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஒவைசி மிகப்பெரிய தலைவர். 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். அப்படி போட்டியிடுவதாக இருந்தால், அவருடைய சவாலை ஏற்க பாஜக தயார். 2022-ம் ஆண்டிலும் பாஜகதான் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும். இதில் சந்தேகமில்லை” என்று ஆதித்யநாத் தெரிவி்த்தார்.

Views: - 132

1

0