“பொய் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?”..! ராகுல் காந்தி முன் 10 கேள்விகளை முன்வைத்த ஜே.பி.நட்டா..!

19 January 2021, 2:51 pm
Nadda_UpdateNews360
Quick Share

தேசிய பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தொடர்பாக மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது தொடர்ச்சியான ட்வீட்டுகளில் நட்டா ராகுலிடம் காங்கிரஸ் கட்சி ஏன் சீனாவிடம் சரணடைகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டார்.

ராகுல் காந்தி தனது மாத விடுமுறையில் இருந்து திரும்பிவிட்டார் என்று கிண்டல் செய்த நட்டா, அவரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி அதற்கு பதிலளிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

“ராகுல் காந்தியும், அவரது வம்சமும், காங்கிரசும் சீன விவகாரத்தில் பொய் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அவர் குறிப்பிடும் அருணாச்சல பிரதேசம் உட்பட ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தை சீனர்களுக்கு பண்டிட் நேரு தவிர வேறு யாரும் பரிசளிக்கவில்லை என்பதை அவர் மறுக்க முடியுமா? காங்கிரஸ் சீனாவிடம் சரணடைந்ததா?” என நட்டா ட்வீட் செய்துள்ளார்.

விவசாயிகளைத் தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தியதாகவும் நட்டா குற்றம் சாட்டியதோடு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை பல ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏன் அதிகரிக்கவில்லை என்று கேட்டார்.

“காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏன் ஏழைகளாக இருந்தனர்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே விவசாயிகளிடம் அவர் அனுதாபம் கொள்கிறாரா?” என்று நட்டா கேட்டார்.

“சீனா மற்றும் அவர்களது கம்யூனிஸ்ட் கட்சியுடனான காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ராகுல் காந்திக்கு ஏதேனும் எண்ணம் இருக்கிறதா? சீன நெருக்கத்தை தனது குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படும் அறக்கட்டளைகளிலிருந்து விலக்கி விட அவர் விரும்புகிறாரா? அல்லது அவர்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்ந்து சீனப் பணம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்படுமா?” என்று மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“கொரோனாவுக்கு எதிரான உற்சாகமான போராட்டத்தில் தேசத்தை கீழிறக்க ராகுல் காந்தி எந்த வாய்ப்பையும் விடவில்லை. இன்று இந்தியா தினசரி மிகக் குறைந்த பாதிப்புகளுடன் கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. நமது விஞ்ஞானிகள் ஒரு தடுப்பூசியைக் கொண்டு வந்தபோதும், அவர் ஏன் விஞ்ஞானிகளை வாழ்த்தவில்லை மற்றும் 130 கோடி இந்தியர்களை ஒருமுறை கூட பாராட்டவில்லை?” என அவர் ட்விட்டரில் கேட்டார்.

“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை ரசித்தார். அவர்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது தமிழ் கலாச்சாரத்தை ஏன் தடைசெய்து அவமதித்தனர்? இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் குறித்து அவர் பெருமைப்படவில்லையா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ராகுல் காந்தி தைரியம் திரட்டுகிறார் என்று நம்புகிறேன்” என்று நட்டா ட்வீட் செய்துள்ளார் .

முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை கட்டியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக ராகுல் இன்று பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜே.பி.நட்டா ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Views: - 0

0

0