சீன நிறுவனத்திற்கு மீண்டும் ஸ்பான்சர்ஷிப்..! ஐபிஎல் முடிவால் உமர் அப்துல்லா காட்டம்..!

3 August 2020, 11:19 am
Omar_Abdullah_UpdateNews360
Quick Share

லடாக்கில் ஊடுருவல்களைத் தொடர்ந்து மக்கள் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும்போது, ​​ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் விளம்பரதாரராக தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின்(என்சி) தலைவர் உமர் அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீன செல்போன் தயாரிப்பாளர்கள் ஐபிஎல்லின் முதன்மை ஸ்பான்சர்களாக தொடருகிறார்கள். அதே நேரத்தில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கப்படுகிறது. சீன பணம்/முதலீடு/ஸ்பான்சர்ஷிப்/விளம்பரம் ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாம் குழப்பமடையும் போது சீனா நம்மை சீண்டுவதில் ஆச்சரியமில்லை” என அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில், சீன மொபைல் நிறுவனமான விவோ உள்ளிட்ட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைத்துக் கொள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ள செய்திக்குத்தான் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“பி.சி.சி.ஐ / ஐ.பி.எல் நிர்வாகக் குழு பெரிய சீன நிறுவனங்கள் உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. சீனர்கள் தயாரித்த டி.வி.க்களை தங்கள் பால்கனிகளில் இருந்து தூக்கி எறிந்த முட்டாள்களை நினைத்து நான் மோசமாக உணர்கிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பரம் இல்லாமல் நாம் உண்மையில் நிர்வகிக்க முடியாது என்று எப்போதும் சந்தேகம் கொண்டுள்ளோம் என்று கூறினார்.

லடாக் மோதலை அடுத்து, ஒரு பக்கம் சீனப் பொருட்களை புறக்கணிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், அரசு நிறுவனங்களிலிருந்து சீன நிறுவனங்களை வெளியேற்ற மத்திய அரசு முழுமையாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தன்னாட்சி பெற்ற பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0