சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமலேயே 15 ஆண்டுகாலம் முதல்வர்..!நிதீஷ் குமாரின் அசர வைக்கும் பின்னணி..!

31 October 2020, 2:29 pm
Nithish_Kumar_Bihar_CM_UpdateNews360
Quick Share

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜாஷ்வி யாதவ் சமீபத்தில் பீகார் முதல்வரான நிதீஷ்குமாரை, அவருக்கு விருப்பமான இடத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுத்தார்.

மேலும் நிதீஷ் குமார் எந்த தொகுதியில் களமிறங்கினாலும் அவருக்கு எதிராக போட்டியிட தயாராக இருப்பதாக சவால் விடுத்தார். ஆனால் நிதீஷ் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது தேர்தல் பணிகளை தொடர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை எதிர்பார்க்கும் நிதீஷ், 2005 முதல் மாநில அரசின் தலைமைப் பொறுப்பை கையில் வைத்துள்ளார். அவர் முதல் முறையாக 2000’ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில் வெறும் 8 நாட்களில் பதவியிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் 2005, 2010, 2015 மற்றும் 2017 என அவர் மொத்தமாக ஐந்து முறை முதல்வராக பதவியேற்றார். ஆனால் இந்த காலகட்டத்தில் நிதீஷ்குமார்  ஒருபோதும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றதில்லை.

நிதீஷ் மாநில சட்டப்பேரவையில் உள்ள சட்ட மேலவையில் உறுப்பினராக உள்ளார்.

அவர் முதல்முறையாக 1977’இல் ஹார்னாட் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் 1985’இல் சட்டமன்றத் தேர்தலில் ஹார்னாட்டிலிருந்து வெற்றியைப் பதிவு செய்தார்.

நிதீஷ் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 என ஆறு முறை வென்றாலும், 1985 தான் அவர் போட்டியிட்ட கடைசி சட்டமன்றத் தேர்தலாகும்.

2000’ஆம் ஆண்டில் நிதீஷ் பீகார் முதல்வராக பதவியேற்றபோது, அவர் பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் உறுப்பினராக இருக்கவில்லை. சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை பெறத் தவறியதால் அவர் எட்டு நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

பின்னர் நவம்பர் 2005 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றபோது, நிதீஷ் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்றார். இந்த முறை மீண்டும், நிதீஷ் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கவில்லை.

அரசியலமைப்பின் படி, ஒரு முதல்வர் அல்லது ஒரு மந்திரி அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக வேண்டும். எனவே, 2006’ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சட்ட மேலவைக்கு நிதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் 2012’இல் முடிவடைந்தது. இதற்கிடையே 2010’ல் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். நிதீஷ் தனது சட்ட மேலவை பதவிக்காலம் 2012’ல் காலாவதியானதும் சட்ட மேலவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் நேரடியாக வாக்காளர்களை எதிர்கொள்வதில் அவர் பயப்படுகிறாரா என்று நிதீஷின் எதிர்ப்பாளர்கள் அடிக்கடி கேள்வி எழுப்புகிறார்கள். அவருக்கு தோல்வியடைந்துவிடுவோம் எனும் பயம் இருப்பதால் தான், சட்டமன்ற உறுப்பினராக சட்டமேலவையின் பாதுகாப்பான பாதையை எடுத்துக்கொள்கிறார் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் 2012’ஆம் ஆண்டில், நிதீஷ் ஏன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த நிதீஷ் குமார், தனக்கு எந்தவொரு நிர்பந்தமும் இல்லை என்றும், தன்னுடைய சுய விருப்பப்படியே எம்எல்சி ஆனதாக விளக்கினார்.

பின்னர் 2015’ல் தேர்தல் நடந்தபோது, ஒரு இருக்கை மீது தனது கவனத்தை மட்டுப்படுத்த விரும்பாததால் தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று நிதீஷ் கூறினார்.

எம்.எல்.சி.யாக நிதீஷின் இரண்டாவது பதவிக்காலம் 2018’இல் காலாவதியானது. அவர் மீண்டும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.சி.யாக அவரது மூன்றாவது பதவிக்காலம் 2024 வரை உள்ளது.

Views: - 21

0

0

1 thought on “சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமலேயே 15 ஆண்டுகாலம் முதல்வர்..!நிதீஷ் குமாரின் அசர வைக்கும் பின்னணி..!

Comments are closed.