நிதீஷ் குமாரை வீழ்த்த சபதம் போட்ட பிரசாந்த் கிஷோர்..! 8 மாதங்களாக சைலண்ட் மோடில் இருக்க காரணம் என்ன..?

12 November 2020, 10:04 am
nitish_kumar_prashant_kishore_updatenews360
Quick Share

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை ஆட்சியை விட்டு விரட்டுவதாக 8 மாதங்களுக்கு முன்பு ஆவேசம் காட்டிய தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர், பின்னர் பீகார் தேர்தல் பக்கமே எட்டிப்பார்க்காமல் போனது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்றதோடு, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் நிதீஷ் குமார் தலைமையில் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் பிரஷாந்த் கிஷோர் குறித்து பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நிதீஷ் குமார் vs பிரஷாந்த் கிஷோர் மோதல் :
நிதீஷ் குமாருக்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் இடையிலான மோதலுக்கு காரணமம் மத்தியில் ஆளும் பாஜக அரசு தான். ஆம், மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் டிசம்பரில் கொண்டு வந்த, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, பிரஷாந்த் கிஷோர் மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்தார்.

சிஏஏ போராட்டங்களுக்கு ஆதரவளித்ததோடு, பாஜகவை கடுமையாக விமர்சித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக வேண்டும் எனக் கூறி வந்தார். இதனால் கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சித்ததாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரஷாந்த் கிஷோர் நீக்கப்பட்டதோடு, கட்சியிலிருந்தும் விலக்கப்பட்டார்.

இதனால் கொந்தளித்த பிரஷாந்த் கிஷோர், மீண்டும் எப்படி ஆட்சி அமைக்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என நிதீஷ் குமாருக்கு சபதம் விட்டதோடு, பீகார் இளைஞர்களை ஒன்றிணைக்க பாட் பீகார் கீ எனும் பிரச்சாரத்தையும் தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், பீகார் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

ஆனால் பின்னர் கடந்த 8 மாதங்களாக அவர் பீகார் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பீகார் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, பீகார் அரசியலை கண்டுகொள்ளவில்லை.

பீகாரை கண்டுகொள்ளாத பிரஷாந்த் : என்ன காரணம்?
நிதீஷ் குமார் ஆட்சியை வீழ்த்துவதாக சபதம் எடுத்த பிரஷாந்த் கிஷோர் என் பீகார் பக்கம் தேர்தல் சமயத்தில் கூட எட்டிப்பார்க்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.

வரும் 2021’இல் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இரு முக்கிய அரசியல் கட்சிகளுடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போட்டுள்ளதால், அவர்களை வெற்றியடையச் செய்யும் பணியில் தீவிரமாக இருப்பதால் தான் பீகார் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் அதே சமயம், பீகார் அரசியலில் பின்னணியிலிருந்து அவர் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார் என அவருக்கு ஆதரவான வட்டத்தில் பேசப்படுகிறது. உதாரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி சிராக் பஸ்வான் தனியாக தேர்தலை சந்திப்பதற்கு காரணமே பிரஷாந்த் கிஷோர் தான் என அவர்கள் கூறி வருகின்றனர். சிராக் பஸ்வான் எதிர்த்துப் போட்டியிட்டதால் தான், பல இடங்களில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது உண்மையில்லை என கூறப்படுகிறது. உண்மையில், பாஜக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிரிக்கவே, சிராக் பஸ்வான் பாஜகவால் தனித்து போட்டியிட வைக்கப்பட்டது என காங்கிரஸ் நம்புகிறது. இதை பிரஷாந்த் கிஷோரும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “பீகார் சட்டசபைத் தேர்தலில் என் பங்கு எதுவும் இல்லை. நான் சிராக் பஸ்வானை பார்த்தே பல மாதங்கள் ஆகிறது. என் பெயரைச் சொல்லி நிதீஷ் குமாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். உண்மையில் தற்போது சிராக் பஸ்வான் வளர்ந்து வருகிறார். இதை நிதீஷ் குமார் உணர வேண்டும்.” எனக் கூறினார்.

காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் சோகம் :
நிதீஷ் ஆட்சியை வீழ்த்தியே தீருவேன் என 8 மாதங்களுக்கு முன் கோபமாக ஐக்கிய ஜனதா தளத்தை விட்டு பிரஷாந்த் கிஷோர் வெளியேறினார்.

தேர்தல் வல்லுனரான பிரசாந்த் கிஷோரின் இந்த சபதத்தால், எப்படியும் 15 ஆண்டுகால நிதீஷ் குமார் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என தப்புக் கணக்கு போட்ட காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி, பிரஷாந்த் கிஷோர் பீகார் தேர்தலை ஏறெடுத்தும் பார்க்காததால், அதிக செலவு செய்தும் இந்த கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது.

Views: - 25

0

0

1 thought on “நிதீஷ் குமாரை வீழ்த்த சபதம் போட்ட பிரசாந்த் கிஷோர்..! 8 மாதங்களாக சைலண்ட் மோடில் இருக்க காரணம் என்ன..?

Comments are closed.