தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கே ஓட்டு..! கோர்க்காலாந்து பிரச்சினையில் மம்தா பானர்ஜிக்கு புதிய தலைவலி..?

30 November 2020, 5:42 pm
giri_roshan_updatenews360
Quick Share

கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் (ஜி.ஜே.எம்.) பிமல் குருங் பிரிவின் மூத்த தலைவர் ரோஷன் கிரி, கோர்க்கலாந்திற்கான தங்கள் கோரிக்கையை கைவிடவில்லை என்றும், தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் கட்சிக்கே 2024’இல் தங்கள் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், ஜி.ஜே.எம்மின் பிமல் குருங் பிரிவு திரிணாமுல் காங்கிரஸை ஆதரிக்கும் என்றும் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக வருவதைப் பார்க்க விரும்புவதாகவும், குர்சொங்கில் நடந்த பேரணியின் பின்னர் செய்தியாளர்களிடம் கிரி கூறினார்.

அக்டோபர் மாதம் கோர்கா தலைவர் பிமல் குருங் தலைமையிலான ஜி.ஜே.எம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி திரிணாமுல் கட்சியுடன் இணைந்தது.

பாஜக கோர்க்கலாந்திற்கான ஒரு நிரந்தர தீர்வைக் காணத் தவறிவிட்டது எனக் கூறி, 2017’ஆம் ஆண்டில் ஒரு தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்து, டார்ஜிலிங்கில் பெரும் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கிரி மேலும், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை வழங்குவோம். டார்ஜிலிங் மலைகளில் வளர்ச்சி குறித்த தனது வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருந்தார். ஆனால் பாஜக, மக்களவையில் எங்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும் 2009 முதல் வாக்கெடுப்பு குறித்த அதன் வாக்குறுதிகளை மதிக்கத் தவறிவிட்டன.” எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கோர்க்கலாந்து கோரிக்கையை திரிணாமுல் கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறித்து கேட்டதற்கு அவர், “திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நமது மாநில கோரிக்கையை நிறைவேற்ற எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு தேவையான அதிகாரம் இல்லை” என்றார்.

“2024 மக்களவைத் தேர்தலில், கோர்க்கலாந்து கோரிக்கையை ஆதரிக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

பினாய் தமாங் பிரிவினருடன் எந்தவொரு நல்லிணக்கத்தையும் நிராகரித்த அவர், கோர்கலாந்து பிராந்திய நிர்வாகத் தலைவர் அனித் தாபா மற்றும் ஜி.ஜே.எம் தலைவர் பினாய் தமாங் ஆகியோருக்கு எந்த ஆதரவும் இல்லை என்றும் அவர்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தமாங்கும் சமீபத்தில் குருங் பிரிவுக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், அவர்களுடன் எந்தவொரு சமாதானத்தையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

2017 கோர்க்கலாந்து மாநில போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் அவருக்கும் பிற கட்சித் தலைவர்களுக்கும் எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கிரி மலைவாசஸ்தலத்திலிருந்து வெளியேறி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வெளியே வாழ்ந்த நிலையில், கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங் மாவட்டத்திற்கு திரும்பினார்.

குருங் மற்றும் கிரி அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததோடு, பாஜகவுடனான தொடர்புகளை துண்டித்துவிட்டதாக அறிவித்தனர்.

Views: - 21

0

0