மாநில இளைஞர்களுக்கு வேலை தருவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா..? காங்கிரஸ் எம்பி சர்ச்சைக் கருத்து..!
20 August 2020, 12:04 pmமத்திய பிரதேச மாநிலத்தின் இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்ததற்காக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விவேக் டங்கா அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை கடுமையாக விமர்சித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் இந்த நடவடிக்கையை பின்பற்றினால் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை கொல்லும் என்று அவர் கூறினார்.
முன்னதாக உள்ளூர் மக்களுக்கு மட்டுமே மாநில அரசாங்கத்தில் வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சவுகான் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். மாநிலத்தின் வளங்கள் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே என்று அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்நிலையில் “ஜனரஞ்சக பைத்தியம் மிக மோசமானது. இது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்புகளுக்கு முகங்கொடுக்க முடியாது.” என்று டங்கா ட்வீட் செய்துள்ளார். “அனைத்து மாநிலங்களும் இந்த நடவடிக்கையை பின்பற்றினால், இந்தியாவின் கூட்டாட்சி உணர்வைக் கொல்லும்.” என மேலும் தெரிவித்துள்ளார்.
100 சதவீத வேலை ஒதுக்கீட்டை அறிவிப்பது அரசின் நலன்களைப் புரிந்து கொள்ளாமலும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு முரணானது என்றும் அவர் சவுகானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அத்தகைய அறிவிப்பு பொது நலனில் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று டங்கா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநில மக்களுக்காக பணியாற்ற, அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசு, தன்னுடைய மாநில இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது எப்படி தவறாகும் என மக்கள் காங்கிரஸ் எம்பிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.