எப்படி வேண்டுமானாலும் வட்டியை வசூலிப்பீங்களா..? : ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!

11 September 2020, 2:15 pm
Quick Share

இ.எம்.ஐ வட்டிக்கு வட்டி வசூலித்த விவகாரத்தில் பதிலளிக்க இனியும் கால அவகாசம் வழங்க முடியாது என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு மழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நட்டின் பொருளாதாரம் வெகு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஏரளமானோர் வேலை இழந்தும், பணிக்கு செல்ல வழியின்றியும் தவித்து வருகின்றனர்.

இது மட்டும் இன்றி ஏராளமான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் சம்பளம் 20 சதவீதத்திற்கும் மேல் பிடித்தம் செய்யப்படுவதாக புகார்களும் எழுந்து வருகிறது.

இந்த இக்கட்டான நிலையில் பொதுமக்களி வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வரும் அவர்கள், இஎம்ஐ மூலமாகவே தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இந்தநிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் இஎம்ஐ கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கொரோனா பேரிடரில் இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது சரியா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

வங்கிகளின் இத்தகைய செயல்பாட்டால் பொதுமக்கள் மேலும் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, பொதுநல மனு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள்,“தவணை சலுகையை பயன்படுத்தியவர்களின் பெயர்கள், கடன் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

அதே நேரம், வங்கிகள் வட்டிக்கு வட்டியை கண்டிப்புடன் வசூலிக்கின்றன. இது. எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. பெரும் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் ரிசர்வ் வங்கி, இந்த அசாதாரண சூழலில் மக்கள் படும் கஷ்டங்களை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது.

அதனால், வட்டிக்கு வட்டி வசூலிப்பது பற்றிய விரிவான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கும்படி மத்திய அரசுக்குஉத்தரவிட வேண்டும்,’ என கூறினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘மனுதாரர்கள் தரப்பில் கூறுவது போன்று செய்யப்பட்டால், வங்கிகள் பேரழிவை சந்திக்கும்.

அதனால், பிரச்னையை தீர்ப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. அதனால், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம். அடுத்த 2 வாரத்தில், இது பற்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறோம்,’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றால், அதற்கு அளிக்கப்படும் உத்தரவாதம் என்ன என்பதை மத்திய அரசு தெளிப்படுத்த வேண்டும். எதையுமே அலட்சியமாக கூற வேண்டாம். வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில், மக்கள் நலனை காப்பதற்கான உறுதியான உத்தரவை நாங்கள் ஏன் பிறப்பிக்கக் கூடாது?

நோய் தொற்றுக் காலத்தில் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதில், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் என்ன பிரச்னை வரப்போகிறது? குறிப்பாக, வாடிக்கையாளர்களிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அபராத வட்டியை வசூலிக்க முடியுமா?.

இயல்புநிலை இல்லாத இந்த நேரத்தில் அது எப்படி சாத்தியமாகும்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘வட்டிக்கு வட்டிக்கு, அபராத வட்டி ஆகியவற்றை வசூலிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு அடுத்த 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இப்பிரச்னை குறித்து அரசு உயர்மட்ட குழுவை கூட்டி உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும், அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தால் கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்.

அதுவரை இந்த கடனை வசூலிக்கும் விவகாரத்தில் தற்போது உள்ள நிலை, அதாவது தடை தொடரும். இனிமேல், இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கான கால அவகாசம் எதையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கேட்கக் கூடாது,’’ என கூறிய நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 8

0

0